மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள புகழ்பெற்ற இரவு நேர உணவுச் சந்தையான சராஃபா பஜாரில், திங்கள்கிழமை நள்ளிரவு இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அங்குள்ள உணவுக் கடை ஒன்றில் சாப்பிட்டு முடித்த இளைஞர்கள் சிலர், கைகளைக் கழுவிவிட்டு தண்ணீரை உதறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் தண்ணீர் துளிகள் கடையிலிருந்த உணவுப் பண்டங்கள் மீது சிதறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது இருதரப்புக்கும் இடையேயான கடுமையான மோதலாக மாறியது.

 

இந்தக் கலவரத்தின்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு, கடைகளில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளைத் தூக்கி வீசி எறிந்தனர். இதனால் அந்தப் பரபரப்பான சந்தைப்பகுதியே போர்க்களமாக மாறியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வரும் நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். தற்போது இருதரப்பு புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சிலரைத் தடுத்து வைக்கவோடு, இந்த வன்முறை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.