தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் ஓட்டுகள் பெறும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இளமங்கலம் பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கச் சென்றபோது, மூதாட்டி ஒருவரின் கையில் தேர்தல் பணியாளர்கள் முன்னிலையிலேயே பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செயலைக் கண்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர், “எதற்காக முதியவர்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்கள்?” என்று தேர்தல் அதிகாரிகளிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தக் காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
