இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் சொகுசு ரயில்களில் ஒன்றான ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பெய்த கனமழையால் ஏசி பெட்டிக்குள் தண்ணீர் ஒழுகிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயங்கும் இந்த ரயிலின் சி-6 பெட்டியில், இருக்கைகளுக்கு மேல் தண்ணீர் சொட்டியதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், அந்தப் பெட்டிக்கு வந்த ரயில்வே அதிகாரி ஒருவரை நேருக்கு நேர் கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்வளவு அதிக கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கிடைக்கும் வசதி இதுதானா என்று அவர் ஆக்ரோஷமாகக் கேட்ட கேள்வி, அங்கிருந்த மற்ற பயணிகளின் ஆதரவையும் பெற்றது.
வாக்குவாதத்தின் போது, அந்த அதிகாரி நிலைமையைச் சரிசெய்ய முயற்சிப்பதும், அங்கிருந்த மற்ற ஊழியர்களைத் தொலைபேசியில் அழைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
Look at the condition of the Shatabdi Express, one of the country’s premier trains. This government does not maintain it properly. By intimidating the media, they can portray everything in the country as being fine. Come down to the ground reality and see for yourself. pic.twitter.com/3ClsbPOfcY
— সাবির (@SabirAl72017365) June 11, 2026
“>
முறையற்ற பராமரிப்பு குறித்து அதிகாரி மீது கேள்வி எழுப்பியது சரிதான் என்று ஒரு தரப்பினரும், தனது பணியைச் செய்ய முயன்ற அதிகாரியைப் பொறுமையின்றி வசைபாடியது தவறு என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், முக்கியத்துவம் வாய்ந்த சொகுசு ரயிலிலேயே இத்தகைய குளறுபடிகள் நடப்பது ரயில்வே நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
