மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் பி.கே. ஹஸ்ரா, தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்காக அறிவித்துள்ள ஒரு வினோத சலுகை தற்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறினால், அவர்களின் ஆலோசனைக் கட்டணத்தில் ரூ.500 தள்ளுபடி செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இதய நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் அந்த முழக்கத்தைக் கூறி ஏற்கனவே சலுகையைப் பெற்றுள்ளனர். மணிப்பால் மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவின் இயக்குநராகப் பணியாற்றும் இவர், தனது சொந்த கிளினிக்கில் மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து டாக்டர் ஹஸ்ராவிடம் கேட்கப்பட்டபோது, “நான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவன். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது எனக்கு ஒரு மத ரீதியான முழக்கம் அல்ல, அது ஒரு அரசியல் முழக்கம். எனக்கென்று ஒரு அரசியல் கருத்தைக் கொண்டிருக்க எனக்கு முழு உரிமை உண்டு” என அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
மேலும், தான் தினமும் பலருக்கு இலவச சிகிச்சை அளிப்பதாகவும், சமீபத்தில் தனது பொதுவான கட்டணத்தை ரூ.2,000-லிருந்து ரூ.1,000-ஆகக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராஃபிகளைச் செய்துள்ள அனுபவம் மிக்க மருத்துவரின் இந்தச் செயல், மருத்துவ நெறிமுறைகளுக்கு மாறானது எனக் கூறி இந்திய மருத்துவ சங்கம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேற்கு வங்க அரசியலில் இந்தச் சம்பவம் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
