ஈரோடு மாவட்டம் கோபி அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளைத் தாய் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது கோபி அருகே உள்ள மொடச்சூர் முத்துநகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்முகுட்டி (27). இந்தத் தம்பதிக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற மகளும் உள்ளனர். அம்முகுட்டிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அம்முகுட்டியின் கள்ளக்காதலன் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டில் இருவரும் தனிமையில் இருந்தபோது, குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தது அவர்களுக்கு இடையூறாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்முகுட்டி, தனது பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதில் குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டது.
வேலை முடிந்து வீடு திரும்பிய சந்தோஷ், குழந்தைகளின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர், இது குறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், குழந்தைகளைத் துன்புறுத்திய தாய் அம்முகுட்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள அவரது கள்ளக்காதலனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
