14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 61 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கணபதி (61) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. முதியவர் கணபதி அச்சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முதியவர் கணபதி சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் கணபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அரசு ஊழியர் குடியிருப்புப் பகுதியில் முதியவர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
