தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் மேற்கொள்ளவிருந்த தனது தேர்தல் பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னை எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை விஜய் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், பொதுமக்களும் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி அளித்திருந்த போதிலும், டி.நகர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளில் தனது ரோடு ஷோவை முடித்துக் கொண்ட விஜய், திடீரென எழும்பூர் பகுதிக்கு செல்லாமல் தனது இல்லத்திற்குத் திரும்பினார்.

ஏற்கனவே சில இடங்களில் நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை முக்கியப் பகுதிகளில் விஜய் பிரச்சாரத்தைத் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதனால் மணிக்கணக்காகக் காத்திருந்த ரத்தத்தின் ரத்தங்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.