ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சந்தித்துப் பேசினர்.

சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் உடனடி உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்றாலும், நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியத் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது. முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறி அமெரிக்கக் குழுவினர் நாடு திரும்பிய போதிலும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று ஈரான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் பதற்றம் நீடித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து முன்னின்று செயல்படத் தயாராக உள்ளது.

இந்த வாரத்தில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதியை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.