அமெரிக்காவின் செல்வாக்கைச் சிதைப்பதற்காக சீனா மற்றும் ஈரான் நாடுகள் புதியதொரு போர் வியூகத்தை வகுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. இது வெறும் ஆயுத விற்பனை மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு எதிரான ஒரு ஆழமான ‘கூட்டணி’ (Strategic Partnership) என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது பற்றி ‘ஒன் வேர்ல்ட் அவுட்லுக்’ (One World Outlook) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சக்தியை ஈரான் எந்த அளவுக்குச் சிதறடிக்கிறதோ, அந்த அளவுக்கு சீனாவுக்கு லாபம். அமெரிக்கா ஈரானுடன் மல்லுக்கட்டித் தனது நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதையே சீனா விரும்புகிறது. ஈரான் நேரடியாகப் போரில் வெற்றி பெறுவதை விட, அமெரிக்காவை நீண்டகாலம் முடக்கி வைப்பதிலேயே சீனா குறியாக உள்ளது.

சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரானுக்கு வழங்கத் தயாராகி வருகிறது. ஆனால், இதில் சிக்கல் வராமல் இருக்க, நேரடியாக வழங்காமல் ‘மூன்றாம் நாடுகள்’ வழியாக இந்த ஆயுதங்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஈரானின் பலத்தைப் பெருக்க சீனா முயல்கிறது. இந்த ஆயுத விநியோகம் வெறும் பெயரளவுக்கானது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனா வழங்க உள்ள அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் போர்க்களத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பெரும் சவாலாக அமையும். போரில் ஏற்படும் இழப்புகளை ஈரான் விரைவாகச் சரிசெய்து மீண்டும் போரிட சீனா உதவி செய்கிறது. அமெரிக்காவின் ‘அட்லாண்டிக் கவுன்சில்’  வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சீனா தொடர்ந்து ஈரானுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் அவற்றின் பாகங்களை வழங்கி வருகிறது. பிபிசி (BBC) செய்தியின்படி, ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்திற்குத் தேவையான பயிற்சிகளையும் பாகங்களையும் சீனா வழங்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் சீனாவின் இந்த நடவடிக்கைகள் வாஷிங்டன், ஜெருசலேம் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புத் திட்டமிடுபவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு அமைதி விரும்பியாகவும், வர்த்தகத்தை மட்டுமே முன்னிறுத்தும் நாடாகவும் காட்டிக்கொள்ளும் சீனாவின் முகத்திரை இதன் மூலம் கிழிந்துள்ளதாக உலக  அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.