இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சர்காகாட் பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது. நைனா கிராமத்தைச் சேர்ந்த சியா குலேரியா என்ற மாணவி, நேற்று காலை 9 மணியளவில் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் மாணவியின் தலையைத் துண்டித்து இந்தக் கொடூரத்தை அரங்கேற்றினார். சாலையில் இரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்த மாணவியின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடி வந்தனர்.

கொலையைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை, விடாமல் துரத்திய பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளியிடமிருந்து ரத்தம் படிந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருதலைக் காதலா? அல்லது முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த இந்த விபரீதம், இமாச்சலப் பிரதேசம் முழுவதும் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.