கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திலீப் (28) என்ற உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகிதா என்ற திருமணமான பெண்ணின் மிரட்டல் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இவர்களிடையே நெருக்கமான உறவாக மாறியுள்ளது.
இந்நிலையில், திலீப்பின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது மகனின் பெயருக்கு மாற்றித் தரும்படி யோகிதா அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சொத்து விவகாரம் மற்றும் மனரீதியான துன்புறுத்தலால் கடும் விரக்தியடைந்த திலீப், இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக திலீப், யோகிதாவுக்குக் காணொளி அழைப்பு செய்து தனது முடிவைத் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இன்ஸ்டாகிராம் மூலம் திலீப்பின் சகோதரிக்குத் தகவல் கொடுத்துள்ளார். குடும்பத்தினர் உடனடியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, திலீப்பை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகனின் மரணத்திற்கு யோகிதாவின் மிரட்டல்களே காரணம் என்று திலீப்பின் தந்தை ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
