கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள் டிவி நடத்தி வரும் பழனிசாமி என்பவர், தனது ‘ராசி டிவி’ என்ற உள்ளூர் சேனலில் கடந்த 11-ம் தேதி இத்திரைப்படத்தை ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும் திரைக்கு வராத படத்தை கேபிள் டிவியில் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் மோகனபிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதில், அனுமதி இன்றி படத்தை ஒளிபரப்பியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கேபிள் டிவி உரிமையாளர் பழனிசாமியை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட அந்தத் தனியார் சேனல் அலுவலகத்திற்குப் போலீசார் சீல் வைத்தனர். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, தணிக்கை செய்யப்படாத ஒரு திரைப்படம் எவ்வாறு அந்தத் தனியார் சேனலுக்குக் கிடைத்தது என்பது குறித்து போலீசார் தற்போது விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.