பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா ஆக்ரோஷமான நிலையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கா முற்றுகையை அறிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகளில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதுடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலை இந்தியாவையும் பாதிக்கும் என்று இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா சட்டவிரோத நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த போர் பதற்றம் இந்தியா மற்றும் ஈரான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இந்தியாவிற்கு ஒரு பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.