ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே, தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்பாளையத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோரின் மகள் சோனா, கோவையில் கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்தபோது, சேலத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரைக் காதலித்துள்ளார்.
இதனால் இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மீறிச் சென்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை தாமோதரன் சோனாவின் வீட்டிற்கு வந்து அவரைத் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் கண் முன்னே மகள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதைச் சகித்துக் கொள்ள முடியாத பெற்றோர், மனவேதனையில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சேர்த்த போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபரீத முடிவு குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
