மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் முக்கிய விநியோக நாடான கத்தார், தனது எல்என்ஜி ஏற்றுமதியை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது இந்தியாவிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க இந்திய அரசு ‘திட்டம் – பி’ என்ற மாற்று ஏற்பாட்டைச் செயல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘ஷெல் பிஎல்சி’ இந்தியாவிற்குத் தேவையான இயற்கை எரிவாயுவை தடையின்றி வழங்க முன்வந்துள்ளது.
சுமார் 65 கப்பல்களைக் கொண்ட ஷெல் நிறுவனம், இந்தியாவின் உர உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்குவதற்கான டெண்டரை எடுத்து விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்திய உரத் துறைக்குத் தேவையான எரிவாயுவை வழங்கிய முதன்மை நிறுவனமாக ஷெல் உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் விவசாயத்திற்குத் தேவையான யூரியா உற்பத்தி பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளைச் சாராமல் மற்ற வழித்தடங்கள் மூலம் எரிவாயுவை இறக்குமதி செய்து, இந்தியாவின் மின்சாரம், போக்குவரத்து மற்றும் வீட்டு உபயோகத் தேவைகளை உறுதி செய்ய ஷெல் நிறுவனம் தற்போது கைகொடுத்து வருகிறது.
