காசியாபாத்தில் வசிக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய தைரியத்தில் 1.4 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார். மாதம் 95,000 ரூபாய் இ.எம்.ஐ (EMI) கட்டி வந்த அவருக்கு, ஐடி துறையில் ஏற்பட்ட திடீர் வேலை இழப்பு பேரிடியாக இறங்கியுள்ளது. மூன்று மாதங்களாக வருமானம் இல்லாத நிலையில், வங்கிக் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவித்த அவர், வேறு வழியின்றி தற்போது ‘ராபிடோ’ பைக் டாக்ஸி ஓட்டி சொற்ப வருமானத்தில் தனது அன்றாட வாழ்க்கையையும், கடனையும் சமாளிக்கப் போராடி வருகிறார்.

​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இவரது கதை, ‘அதிக சம்பளம் என்பது நிரந்தரம் அல்ல’ என்பதை ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக உணர்த்தியுள்ளது. “கௌரவத்தைப் பார்க்காமல் பைக் ஓட்டியாவது கடனை அடைக்க முயலும் இந்த மனதிடம் பெரியது” என ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், “சேமிப்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கக் கூடாது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் கனவு இல்லமாகத் தெரிந்த அந்த 3BHK பிளாட், இன்று அவருக்குத் தூக்கமில்லா இரவுகளைப் பரிசாக அளித்துள்ளது. இந்த உருக்கமான வீடியோ தற்போது இணையத்தை உலுக்கி வருகிறது.