டெல்லி போன்ற பெருநகரங்களில் வானத்தை முட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பது பலருக்குக் கனவாக இருக்கலாம். ஆனால், அங்கேயே 19-வது மாடியில் வசிக்கும் ஒரு பெண், “இந்த வாழ்க்கை ஒரு தீப்பெட்டிக்குள் அடைபட்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது” எனப் பதிவிட்டுள்ள வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது பால்கனியில் இருந்து கீழே எறும்புகளைப் போலத் தெரியும் மனிதர்களையும், கான்கிரீட் காடுகளையும் காட்டிய அவர், வசதிகள் இருந்தாலும் இயற்கையான காற்றோட்டமும், மன நிம்மதியும் இங்கே கேள்விக்குறிதான் என ஆதங்கப்பட்டுள்ளார்.

​இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கீழே மைதானத்தில் விளையாடும் தனது மகனைக்கூட 19-வது மாடியில் இருந்துதான் கண்காணிக்க வேண்டியிருப்பதாக அந்தத் தாய் வேதனை தெரிவித்துள்ளார். “பார்க்க நவீனமாகத் தெரிந்தாலும், நாம் வசிக்கும் வீடுகள் வெறும் கான்கிரீட் பெட்டிகளாக மாறிவிட்டன” என அவர் கூறிய கருத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நகரத்து வாழ்க்கை என்பது ஆடம்பரமான சிறைதானா என்ற கேள்வியுடன் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.