பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து 5 பில்லியன் டாலர் (சுமார் 41,500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய 2 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில், இந்த உதவி மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
ஈரான் உடனான போர் பதற்றங்களுக்கு மத்தியில், தனது கடனை உடனடியாகத் திருப்பித் தருமாறு ஐக்கிய அரபு அமீரகம் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், சவூதி அமைச்சரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நிதியுதவியானது பாகிஸ்தானின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பதோடு, சர்வதேசச் சந்தையில் அந்நாட்டின் பொருளாதார நிலையைச் சற்று நிலைப்படுத்த உதவும். தற்போது பாகிஸ்தானிடம் 16.4 பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பு உள்ள நிலையில், இந்த 5 பில்லியன் டாலர் உதவி ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டுக் கொடுப்பனவுகளைச் சமாளிக்க உதவும்.
சவூதி மற்றும் கத்தார் நாடுகளின் இந்த ஆதரவு, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளுக்குக் கிடைத்த கைமாறாகப் பார்க்கப்படுகிறது.
