அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஈரானால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, ‘ஜக் விக்ரம்’ என்ற இந்தியக் கப்பல் வெற்றிகரமாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
சுமார் 20,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வரும் இந்தக் கப்பல், போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இந்த ஆபத்தான வழித்தடத்தைக் கடந்த முதல் இந்தியக் கப்பலாகும். இதனால் இந்தியாவுக்கு இருந்து வந்த எரிபொருள் விநியோக நெருக்கடி சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் இன்னும் ஏற்கவில்லை. ஒரு நாளைக்கு 15 கப்பல்கள் மட்டுமே இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த முடியும் என்று ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இன்னும் 15 இந்தியக் கப்பல்கள் அங்கேயே சிக்கியுள்ளன.
ஒருபுறம் ஈரானியச் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடிப்பதாலும், மறுபுறம் லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்வதாலும், இந்தப் போர்நிறுத்தம் முழுமையான அமைதிக்கு வழிவகுக்குமா என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது. இதனால் இந்தியாவுக்கான முழுமையான நிவாரணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
