அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளுக்குச் செய்யும் உதவியாக, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளதாகக் கூறிய டிரம்ப், பல நாடுகள் எண்ணெய் வாங்குவதற்காக இப்போது அமெரிக்காவை நோக்கி வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா ‘அமெரிக்காவிற்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினால் உடன்பாடு எட்டப்படும் என்றும், மாறாக ‘இஸ்ரேலுக்கு முன்னுரிமை’ கொடுத்தால் போர் தீவிரமடையும் என்றும் ஈரானியத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.