கூகுள் பே (Google Pay) நிறுவனம் தனது பயனர்களுக்காக ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) என்ற புதிய சேவையை ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இது ஏதோ மோசடி என்று பரவி வரும் ஆடியோ செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், இது வங்கி கணக்கு இல்லாத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் ஒரு பாதுகாப்பான அம்சம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம், முதன்மை பயனர் தனது வங்கி கணக்கிலிருந்து 5 நபர்கள் வரை சேர்த்துக்கொள்ள முடியும். இதில் ‘முழு அதிகாரம்’ (Full Delegation) என்ற முறையில் மாதம் ரூ.15,000 வரை வரம்பு நிர்ணயித்து விட்டால், இரண்டாம் நிலை பயனர் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்காமலேயே செலவு செய்ய முடியும்.
மற்றொரு முறையான ‘பகுதி அதிகாரம்’ (Partial Delegation) மூலம், ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும் முதன்மை பயனர் தனது போனில் அனுமதி கொடுத்தால் மட்டுமே பரிவர்த்தனை நடக்கும்.
உங்கள் கூகுள் பே செயலியில் உள்ள ‘புரொபைல்’ பகுதிக்குச் சென்று ‘UPI Circle’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு ‘Set up Pocket Money’ என்பதை கிளிக் செய்து, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களின் மொபைல் எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் வரம்புகளை நிர்ணயித்து உங்கள் UPI பின்னைப் பயன்படுத்தி உறுதி செய்தால் போதும். இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் கடைகளில் க்யூஆர் கோடு (QR Code) ஸ்கேன் செய்து எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
தற்போது கடைகளில் பணம் செலுத்த மட்டுமே இந்த வசதி உள்ளது; மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
