சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தவெக தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த தேர்தல் நடத்தும் அலுவலர், அன்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, தவெக-வின் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக மொத்தம் 15 கடுமையான நிபந்தனைகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. விஜய்யின் வருகையை முன்னிட்டு அறந்தாங்கியில் தவெக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
