மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கைஜ் தாலுக்காவில், தனது சொந்த பெரியப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பாலக்கட் மலைத்தொடரில் உள்ள ஒரு குக்கிராமத்தில், கால்நடை கொட்டகையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்த சிறுமியை, அவரது பெரியப்பா வழிமறித்து இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மனமுடைந்த அந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்ரபதி சம்பாஜிநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. “உறவினரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது” என காவல் ஆய்வாளர் உமேஷ் நிகாம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
