ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடிகளைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி புதிய “கோல்டன் ஹவர்” என்ற திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஒருவர் ஒரு புதிய நபருக்கோ அல்லது முன்பின் தெரியாத கணக்கிற்கோ ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்பினால், அந்தப் பணம் உடனடியாகச் செல்லாது. மாறாக, சுமார் ஒரு மணி நேரம் வரை அந்தப் பணப்பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும்.

இந்த ஒரு மணி நேரத்திற்குள், தான் ஏமாற்றப்பட்டதை ஒரு பயனர் உணர்ந்தால், அந்தப் பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்ய ‘கில் ஸ்விட்ச்’ வசதியும் வழங்கப்பட உள்ளது. இது ஏமாற்றப்படும் நபர்களின் பணத்தைக் காக்க ஒரு வலிமையான ஆயுதமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தினசரி ஷாப்பிங் மற்றும் கடைகளில் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து செலுத்தும் பணத்திற்கு இந்த ஒரு மணி நேரக் காத்திருப்பு விதி பொருந்தாது. அதேபோல், நம்பகமான நபர்கள் மற்றும் நிறுவனங்களை ‘ஒயிட்லிஸ்ட்’ பட்டியலில் சேர்த்துக்கொண்டால், அவர்களுக்கு வழக்கம் போல் உடனடியாகப் பணம் சென்றடையும்.

2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய விதிகளில், ரூ.50,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்குத் ‘நம்பகமான நபர்’ மூலம் கூடுதல் அங்கீகாரம் பெறுவது போன்ற வசதிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

வேகத்தை விட பாதுகாப்பே முக்கியம் என்ற நோக்கில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, சாமானிய மக்களின் உழைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.