நேபாளத்தின் புதிய மற்றும் இளம் பிரதமராகப் பதவியேற்ற ‘ராப்பர்’ புகழ் பலேந்திர ஷா பதவியேற்ற வெறும் 15 நாட்களிலேயே தனது அமைச்சரவையில் இருந்த ஒருவரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தீப் குமார் ஷா, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது மனைவியின் பதவிக்காலம் முடிந்த பிறகும் மீண்டும் அவருக்குச் சுகாதாரக் காப்பீட்டு வாரியத்தில் பதவி வழங்கப் பரிந்துரைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து ஆளும் ‘ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி’ அளித்த பரிந்துரையின் பேரில், பிரதமர் பலேந்திர ஷா அவரை உடனடியாகப் பதவியிலிருந்து விடுவித்துள்ளார். இந்தச் சம்பவம் நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தைச் சரியாகக் கையாளாத சுகாதாரத்துறை அமைச்சர் நிஷா மேத்தாவிற்கும் பிரதமர் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ‘ஜென் Z’ போராட்டங்களைத் தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமரான பலேந்திர ஷா, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்குத் தனது ஆட்சியில் இடமில்லை என்பதை இந்த அதிரடி நடவடிக்கை மூலம் நிரூபித்துள்ளார். பாரம்பரிய அரசியல் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த பலேந்திர ஷாவின் இந்த அதிரடி, நேபாள இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
