ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக, அக்கட்சியின் அதிருப்தி வேட்பாளராக கருதப்பட்ட ஜாபர் சாதிக், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்ட நிலையில், விருப்ப மனு அளித்த ஜாபர் சாதிக்கிடம் தலைமை முறையான நேர்காணல் கூட நடத்தவில்லை என அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லி தலைமை உரிய மரியாதை அளிக்காததே தான் கட்சியை விட்டு விலகக் காரணம் என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் அரசியல் நகர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணித் தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக-வின் இந்த புதிய சேர்க்கை ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் களத்தை மும்முனைப் போட்டியாக மாற்றியுள்ளது.
ஜாபர் சாதிக் தவெக-வில் இணைந்திருப்பது, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்குமா அல்லது விஜய்யின் கட்சிக்கு கூடுதல் பலத்தை சேர்க்குமா என்ற விவாதம் தற்பொழுது ஈரோடு அரசியலில் சூடுபிடித்துள்ளது.
