மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுடன் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், அமெரிக்கா தனது ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 1970-களின் வியட்நாம் போருக்குப் பிறகு, முதல்முறையாக தகுதியுள்ள அனைத்து ஆண்களையும் தானாகவே ராணுவப் பட்டியலில் சேர்க்கும் ‘தானியங்கி பதிவு’ முறையை அமெரிக்கா அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான முன்மொழிவு 2026-ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இனி தாங்களாக முன்வந்து பதிவு செய்யத் தேவையில்லை; அரசின் தரவுத்தளத்தின் மூலம் அவர்கள் பெயர் நேரடியாக ராணுவப் பட்டியலில் இணைந்துவிடும். இது கட்டாய ராணுவ சேவைக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
புதிய சட்டத்தின்படி, அமெரிக்க இளைஞர்கள் ராணுவப் பட்டியலில் இணையத் தவறினால் அது கடும் குற்றமாகக் கருதப்பட்டு அபராதம், சிறைத்தண்டனை மற்றும் அரசு வேலைகள் மறுக்கப்படும் அபாயம் உள்ளது. ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர அரசு ஆவணங்களை ராணுவத் தரவுத்தளத்துடன் இணைப்பதன் மூலம் இந்தப் பதிவு முறை தானியங்கி ஆக்கப்பட உள்ளது.
ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் நிலவும் உலகளாவிய பதற்றத்தை எதிர்கொள்ளவே இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
