ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து இஸ்ரேல் கடும் சந்தேகம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானை ஒரு நம்பகமான தரப்பாக இஸ்ரேல் கருதவில்லை என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 நாட்களாக ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றம், உலக நாடுகளை பெரும் கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை எட்டப்பட்டது. இந்த உடன்படிக்கைக்குப் பின்னால் பாகிஸ்தானின் தூதரக முயற்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்த பெருமை தங்களையே சாரும் என பாகிஸ்தான் அரசு கொண்டாடி வருகிறது. இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், “உலக அளவில் பாகிஸ்தான் இப்போது ஒரு ‘நம்பகமான’ மத்தியஸ்தராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது எங்களது தலைமைக்கு கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் இந்த கருத்தை இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் நிராகரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, நாங்கள் பாகிஸ்தானை ஒரு நம்பகமான தரப்பாக கருதவில்லை. அமெரிக்கா தனது சொந்தத் தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் பாகிஸ்தானை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கலாம். கடந்த காலங்களில் ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தைக்கு கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை அமெரிக்கா பயன்படுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். அதே போன்ற ஒரு தந்திரமாகவே இதுவும் பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கும் முடிவுகளைப் பெறுவதற்கு அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதே தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, நீண்டகால அமைதி குறித்து விவாதிக்க அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு நாளை (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10) இஸ்லாமாபாத் செல்ல உள்ளது. அங்கு ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தான் மீதான இஸ்ரேலின் இந்த விமர்சனங்கள், நாளை நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
