ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போர், கடந்த 40 நாட்களாக உலகையே உலுக்கி வந்தது. ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்தன.
குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஈரான் தனது பிடியைத் தளர்த்தாவிட்டால் அந்த நாட்டையே அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிரடியாக அறிவித்துள்ளன. இந்த முடிவால் போர் பதற்றம் சற்று குறைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருக்குமாறும், ராணுவ தளங்கள் அல்லது மின் நிலையங்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
