மராட்டிய மாநிலம் புனே அருகே தனது 11 மாதக் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய தாயின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சன்காவ் பகுதியைச் சேர்ந்த பூஜா பவார் என்ற 22 வயது பெண், கடந்த மார்ச் மாதம் தனது குழந்தையுடன் மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
மேலும் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஜம்புட் கிராமத்தில் தனியாக இருந்த பூஜாவை போலீசார் பிடித்தனர். தொடக்கத்தில் குழந்தை கீழே விழுந்து இறந்ததாகக் கூறி நாடகமாடிய பூஜா, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கள்ளக்காதலுக்காக குழந்தையைத் தீர்த்துக்கட்டிய உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனால் தனது கணவரைப் பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்ட பூஜாவுக்கு, தனது கைக்குழந்தை இடையூறாக இருந்ததாகத் தெரிகிறது. குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த அவர், துணி துவைக்கும் கல்லில் குழந்தையின் தலையை மோதி கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் பின்னர் சடலத்தைப் பையில் கட்டி அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். அவர் அடையாளம் காட்டிய கிணற்றிலிருந்து குழந்தையின் அழுகிய உடலை மீட்ட போலீசார், பூஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகனையே தாய் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
