மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டு பெண் நாய்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேமராவின் கோணத்தை மாற்றி வைத்துவிட்டு இந்த வக்கிரம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தேரி மேற்கு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது இரண்டு வளர்ப்பு நாய்களைப் பராமரிப்பதற்காக ராஜன் ஷா என்பவரைத் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தியுள்ளார். வழக்கமாகப் பணியாற்றும் காப்பாளர் விடுப்பில் சென்றதால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாய்களின் உரிமையாளர் வேலை நிமித்தமாக டெல்லி சென்றிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நள்ளிரவில், உரிமையாளர் டெல்லியில் இருந்தபடியே தனது வீட்டில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சோதித்துள்ளார். அப்போது, ஹாலில் இருந்த கேமராவின் கோணம் திட்டமிட்டு மாற்றப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். மேலும், தனது நாய்கள் வழக்கத்திற்கு மாறாகத் தவிப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அவர், உடனடியாக அண்டை வீட்டாருக்குத் தகவல் கொடுத்து நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
அண்டை வீட்டார் மற்றும் ஒரு பெண்மணி விரைந்து சென்று பார்த்தபோது, நாய்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. உடனே அம்போலி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்தபோது, தான் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக ராஜன் ஷா மழுப்பினார்.
இருப்பினும், போலீசார் தங்களது பாணியில் நடத்திய விசாரணையில், ராஜன் ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சிறிய நாயின் உடம்பில் தவறாகக் கை வைத்ததுடன், பெரிய நாயைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜன் ஷாவைக் கைது செய்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
