ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், அடுத்த சில மணிநேரங்களிலேயே முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்களே இந்தத் திடீர் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலைத் தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான் அரசின் முயற்சியால் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, லெபனான் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற நிபந்தனை இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், போர்நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது கடுமையான குண்டுமழை பொழிந்தது.

“லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும்” என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவோ லெபனான் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரசா அமீரி மொகதம், போர்நிறுத்தம் தொடர்பான தனது சமூக வலைதளப் பதிவை அதிரடியாக நீக்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் தொடங்கவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் தனது தூதுக்குழுவை அனுப்பாமல் தவிர்க்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தூதரின் பதிவு நீக்கப்பட்டிருப்பது, ஈரான் அதிகாரப்பூர்வமாகப் போர்நிறுத்தத்தில் இருந்து விலகுவதைக் குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தம் செல்லாததாகிவிடும் என ஈரான் எச்சரித்துள்ளதால், பாகிஸ்தான் மேற்கொண்ட அமைதி முயற்சி கேள்விக்குறியாகியுள்ளது.