தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளது குறித்து பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், ஒரு நடிகராக அவர் கொண்டுள்ள மக்கள் கவர்ச்சி என்பது கூட்டத்தைக் கூட்டவும் மக்களைத் திரட்டவும் மட்டுமே உதவும் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், அரசியலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒருவர் தன்னை முழுமையாக அரசியலில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும், விஜய் களத்தில் எவ்வளவு காலம் செலவிடுகிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதின் நபின், தமிழகத்தில் பாஜக ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்குவதாகவும் தெளிவுபடுத்தினார்.
மேலும் விஜய் அரசியலில் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாகவும், எனவே அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து இப்போதே கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக மற்றும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றும், தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
