புனேவில் தனது மறுமணத்திற்கு இடையூறாக இருந்த 11 மாதக் குழந்தையைத் தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாயமான மனைவியைத் தேடிய கணவருக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் ரத்தத்தை உறைய வைத்துள்ளது.

கடந்த மார்ச் 8, 2026 அன்று, 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது 11 மாதக் குழந்தையுடன் கணவர் வீட்டிலிருந்து மாயமானார். மனைவியையும் குழந்தையையும் தேடி வந்த கணவர், ஒரு மாதம் கழித்து தனது மனைவி மற்றொரு ஆணுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தனது மகன் எங்கே என்று மனைவியிடம் கணவர் கேட்டபோது, அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதி, அந்தப் பெண்ணின் இரண்டாவது கணவரைத் தொடர்புகொண்ட முதல் கணவர், “அவள் உன்னுடன் வாழட்டும், ஆனால் என் மகனை என்னிடம் ஒப்படைக்கச் சொல்” என்று கூறியுள்ளார். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த கணவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரித்தபோதுதான், 11 மாதக் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்ததாவது, குடும்பத்தினர் கொங்கன் பகுதிக்குச் சுற்றுலா சென்றபோது, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அந்தப் பெண் எரிச்சலடைந்தார். வீட்டிற்கு வந்த பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், கணவர் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டார். ஏற்கனவே கோபத்தில் இருந்த அந்தப் பெண், ஆத்திரத்தில் குழந்தையைக் கொன்றுள்ளார்.

குழந்தையைக் கொன்ற பிறகு, யாருக்கும் தெரியாமல் இருக்க ஒரு பையில் கல்லை வைத்து, குழந்தையின் உடலை கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் வீட்டிலிருந்த பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்ற அவர், புதிய செல்போன் வாங்கி, ஏஜென்ட் ஒருவரின் உதவியுடன் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது கணவரிடம் தனக்குக் குழந்தை இருப்பதை அவர் மறைத்துள்ளார். மேலும் முதலில் குழந்தை தவறி விழுந்து இறந்ததாகக் கூறி போலீசாரை ஏமாற்ற முயன்ற அந்தப் பெண், பின்னர் தானே குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. அந்தப் பெண் தற்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.