டெல்லி சட்டமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் பெரும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. உபி (UP) மாநில பதிவு எண் கொண்ட அதிவேக கார் ஒன்று, சட்டமன்றத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை இடித்துத் தள்ளிக்கொண்டு அதிரடியாக உள்ளே புகுந்தது. அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் திகைத்துப்போய் அந்த காரை நிறுத்த முயன்றனர்.

ஆனால், மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார், சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலக போர்டிகோ அருகே நின்றது. அங்கிருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர், மலர்க்கொத்து ஒன்றை அங்கிருந்த மேடையில் வைத்துவிட்டு, மீண்டும் காரில் ஏறி அதே வேகத்தில் தப்பிச் சென்றார்.

பல அடுக்கு பாதுகாப்புகளை மீறி இந்தச் சம்பவம் நடந்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் டெல்லி சட்டமன்றத்திற்கு ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் பாதுகாப்புக் குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, அந்த காரையும் அதை ஓட்டி வந்த நபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.