மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது எவராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் உடன்படாததாலும், சர்வதேச சந்தைக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க மறுப்பதாலும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை முழுமையாகத் தகர்த்துவிடுவேன் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஏபிசி நியூஸ் (ABC News) நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதற்கான இறுதி எச்சரிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை நீட்டித்துள்ள டிரம்ப், இந்திய நேரப்படி ஏப்ரல் 8-ம் தேதி மாலைக்குள் ஈரான் பணியவில்லை என்றால் மிகக் கொடிய தாக்குதல் நடத்தப்படும் எனத் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் இந்த மிரட்டல்களைக் கண்டு ஈரான் கிஞ்சிற்றும் அஞ்சவில்லை என்பதுதான் தற்போதைய பரபரப்பான செய்தி. டிரம்பின் எச்சரிக்கையைச் சமூக ஊடகங்களில் கிண்டல் செய்து வரும் ஈரான், அமெரிக்காவின் அதே மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று சவால் விட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, தங்களின் உள்கட்டமைப்புகள் மீது கை வைத்தால் அமெரிக்கா இராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.

இரு நாடுகளும் சமரசத்திற்கு வராமல் பிடிவாதம் காட்டி வருவதால், ஏப்ரல் 8-ம் தேதி உலகமே உற்றுநோக்கும் ஒரு “கருப்பு தினமாக” மாறுமோ என்ற அச்சம் நிலவுகிறது.