மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு புதிய திருப்பமாக 45 நாட்கள் போர்நிறுத்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
ஈரானின் ராணுவக் கட்டளை மையம், தங்கள் நாட்டுப் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் மீது கடும் பதிலடி கொடுக்கப்படும் எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், மோதலைத் தவிர்க்கவும் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டவும் சர்வதேச மத்தியஸ்தர்கள் குழு ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 45 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானால் மட்டுமே பிராந்தியம் முழுவதும் ஏற்படப்போகும் பேரழிவைத் தடுக்க முடியும் என்பதால், இந்த முயற்சி கடைசி நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மிரட்டல்களைக் குறைக்கவில்லை. “ஹார்முஸ் ஜலசந்தியைத் திறங்கள், இல்லையென்றால் நரகத்தைப் பார்ப்பீர்கள்” என்று எச்சரித்துள்ள அவர், வரும் செவ்வாய்க்கிழமை ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் எனத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி” எனக் காலக்கெடு விதித்துள்ள டிரம்ப், ஆக்சியோஸ் (Axios) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உடன்பாடு ஏற்பட நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அது நடக்கவில்லை என்றால் ஈரானில் இருப்பவை அனைத்தையும் தகர்த்துவிடுவேன்” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். டிரம்பின் இந்த அதிரடித் திட்டத்தாலும், ஈரானின் பதிலடி எச்சரிக்கையாலும் இன்னும் இரண்டு நாட்களில் போர் நிற்குமா அல்லது நரகத்தைக் காட்டுமா என்பதில் உலகமே உறைந்து போயுள்ளது.
