தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பர்ஹத் என்ற இளம்பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீச்சல் தெரிந்த அவர்கள் எப்படி நீரில் மூழ்கி இறந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பர்ஹத்தின் தந்தை தனது மருமகன் அசாருதீன் மீது போலீசில் புகார் அளித்தார்.

தனது மகள் மூன்றாவது முறையாகக் கர்ப்பமாக இருந்ததாகவும், அது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்ததாகவும் அவர் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரிடம் சிக்கிய அசாருதீன், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கருக்கலைப்பு செய்ய அவர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மனைவி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த அசாருதீன், அவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று முதலில் மனைவியை நீரில் மூழ்கடித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் குழந்தைகளைப் பராமரிக்க முடியாது என்பதால் அவர்களையும் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு, விபத்து போல நாடகமாடியுள்ளார். உண்மையை ஒப்புக்கொண்ட அசாருதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.