ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர், தனது முதல் மனைவி சிரவந்தி மற்றும் இரண்டு மகன்களுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், பிரவீன் தனது அத்தை மகள் மகேஸ்வரியை காதலித்து கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இது சிரவந்திக்குத் தெரியவந்தபோது தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கொடுமையின் உச்சமாக, தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிரவந்தியிடம் காட்டி பிரவீன் அவரைத் தொடர்ந்து மனரீதியாகச் சித்திரவதை செய்து வந்துள்ளார். கணவனின் இத்தகைய செயலால் வாழ்க்கையில் பெரும் விரக்தி அடைந்த சிரவந்தி, விடுதியில் தங்கிப் படித்து வந்த தனது மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

பின்னர், தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தனது சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினார். இதைக் கண்டு பதறியபடி சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிரவந்தி தனது இரண்டு மகன்களையும் தூக்கிலிட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தற்கொலைக்குத் தூண்டிய பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.