ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த சூர்யாபாய் என்பவர், தனது கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து ‘நடமாடும் தங்க மாளிகை’ போல வலம் வந்துள்ளார். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்குச் சென்ற இவரைப் பார்த்த பக்தர்கள், அவர் அணிந்திருந்தது நிஜமான தங்கம் என நம்பி ஆச்சரியத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இவரது கூட்டாளியான விஜயகுமார் என்பவர் டெல்லியில் அதிக நகைகளுடன் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சூர்யாபாயின் தொடர்பு தெரியவரவே, அதிகாரிகள் சூர்யாபாயை அதிரடியாகப் பிடித்து விசாரணை நடத்தினர்.
சூர்யாபாயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியபோது அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் உடல் முழுவதும் அணிந்திருந்த கிலோ கணக்கிலான நகைகள் அனைத்தும் வெறும் ‘கவரிங்’ நகைகள் என்பது தெரியவந்தது.
வெறும் ‘கெத்து’ காட்டுவதற்காகவே அவர் போலி நகைகளை அணிந்து ஊர் சுற்றி வந்துள்ளார். அவர் அணிந்திருந்தது உண்மையான தங்கம் என்று நினைத்துச் சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இந்தத் தகவல் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
