பெங்களூருவில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் தனியாகச் செல்லும் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெங்களூருவில் பெண் ஒருவரை வழிமறித்து மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் தொட்டபிதாரகல்லு பகுதியில் பால்கடை நடத்தி வரும் விஜயம்மா என்பவர், கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தனது கடையை மூடிவிட்டுத் தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கி, விஜயம்மாளின் பின்னால் வந்து அவரைத் தாக்கி பலவந்தமாகத் தரையில் தள்ளியுள்ளான். தான் அணிந்திருந்த 25 கிராம் எடையுள்ள தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் கூச்சலிட்டுப் போராடியுள்ளார். இருப்பினும், அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தாலிச் சங்கிலியைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பயங்கரக் காட்சியில், பெண் கீழே தள்ளப்பட்டுப் போராடுவதும், அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஒரு தெருநாய் உடனடியாக ஓடிவந்து கொள்ளையனைத் தாக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. அந்தத் தெருநாய் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் குற்றவாளியைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், கொள்ளையர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற்று அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட விஜயம்மா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஸ்கூட்டர் மற்றும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கவும், பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்கவும் காவல்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.