கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், நடனக் கலைஞருமான அகில் என்.ஆர்.டி  மற்றும் அவரது மனைவி மேகா தொடர்பான விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அலப்புழா மாவட்டம் நூரானாட்டைச் சேர்ந்த அகில், தனது நகைச்சுவை வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் கன்டென்ட் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர். ஆரம்பத்தில் மெர்ச்சண்ட் நேவியில் பணியாற்றிய இவர், பின்னர் முழுநேர கன்டென்ட் கிரியேட்டராக மாறினார்.

பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவரும், மேகாவும் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி அன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த ஜோடியின் வீடியோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மேகாவும் அகிலுடன் சேர்ந்து பல வீடியோக்களில் தோன்றி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர். ஆனால், இவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் தற்போது எதிர்பாராத திருப்பமும் சோகமும் ஏற்பட்டுள்ளது. மேகா தன் கணவரை விட்டுப் பிரிந்து, உள்ளூர் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருடன் சென்றுவிட்டதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன.

 

அந்த நபர் சமீபத்தில் அரசு வேலை பெற்றுள்ளதாகவும், அதன் பின்னரே இந்த விவகாரம் அரங்கேறியதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. ஆரம்பத்தில் மேகா காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டுத் தேடப்பட்ட நிலையில், அதற்குச் சாட்சியாக ஒரு சிசிடிவி காட்சியும் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் தனது உடமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, அருகிலிருந்து காத்திருந்த ஒருவருடன் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

எனினும், சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவல்களும் வீடியோக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நேரடி மற்றும் முழுமையான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இல்லாமல் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, மேகா தரப்பிலிருந்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வீடியோவில், தங்களது திருமண வாழ்வில் ஏற்பட்ட விரிசல்களுக்குத் தன் மீது மட்டும் முழுப் பழியையும் சுமத்த முடியாது என்றும், சில தனிப்பட்ட காரணங்களால் தான் விலக நேரிட்டதாகவும்  அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோகமான சூழலில், அகிலின் நெருங்கிய நண்பரும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சாய் கிருஷ்ணா தனது யூடியூப் சேனல் வாயிலாக இது குறித்துப் பேசி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், அகில் எங்குமே தனது மனைவியைத் தவறாகப் பேச வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் அவரை யாரும் விமர்சிக்கவோ அல்லது தாக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். காதலித்துத் திருமணமான ஜோடியின் இந்த திடீர் பிரிவு இணையவாசிகளிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருஷத்திற்கு 10 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் youtube-ரை விட்டுவிட்டு சாதாரண நடத்துனருடன் கள்ளக்காதலால் மனைவி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.