விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த பெண் ஒருவர் பின்னர் எழுந்து சாதாரணமாக நடந்து சென்ற வினோதச் சம்பவம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த சுமித் ரமணி என்ற நிறுவனத் தலைவர் பகிர்ந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து ஓய்வறைக்கு வந்ததாகவும் ஆனால் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து மிகவும் இயல்பாக நடந்து சென்று தட்டில் உணவுகளை எடுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உயரமான குதிகால் காலணிகளை அணிந்திருந்த அந்தப் பெண் எவ்வித சிரமமும் இன்றி நடந்து சென்றதைக் கண்டு தாம் வியப்படைந்ததாகச் சுமித் ரமணி அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் ஒரு தரப்பினர் அந்தப் பெண் வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே சமயம் மற்றொரு தரப்பினர் அந்தப் பெண்ணுக்கு நீண்ட தூரம் நடக்க முடியாத மருத்துவக் காரணங்கள் அல்லது வெளியில் தெரியாத உடல்நலப் பாதிப்புகள் இருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். தற்பொழுது இத்தகைய நடைமுறைகள் பெருகி வருவதாகவும் ஒருவேளை அவர் இதற்காகப் பணம் செலுத்தி இந்தச் சேவையைப் பெற்றிருந்தால் அதில் தவறு ஏதுமில்லை என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்தப் பதிவு விமான நிலையங்களில் வழங்கப்படும் சக்கர நாற்காலி சேவைகளின் நம்பகத்தன்மை குறித்த புதிய விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.