ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால், உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படப்போவதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நார்வே வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிகோலாய் டாங்கனிடம் அவர் கூறியதாவது,
“ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக, மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் விநியோக இழப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும். குறிப்பாக, விமான எரிபொருள் (Jet Fuel) மற்றும் டீசல் தட்டுப்பாடு ஆசிய நாடுகளில் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாகத் தாக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரினால் இதுவரை நாளொன்றுக்கு 12 மில்லியன் பேரல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கியமான 40 எரிசக்தி நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகள் போரில் சேதமடைந்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் தேவையைக் கருத்தில் கொண்டு, தேவைப்பட்டால் சர்வதேச எரிசக்தி முகமை இதில் தலையிட்டு நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கும்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையைத் தற்காலிகமாக மூடியது. உலக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் 20 சதவீதம் இந்தப் பாதையில்தான் நடைபெறுகிறது. இந்தப் பாதை முடங்கியதால், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இதன் காரணமாக நாளொன்றுக்கு 20 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வராமல் முடங்கியுள்ளது. இது சர்வதேச சந்தையில் மிகப்பெரிய ‘ஆயில் ஷாக்’ ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் 80 சதவீத எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆசிய நாடுகளுக்கே செல்கின்றன. இதனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் இந்தப் பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். குறிப்பாக, ஏழை நாடுகள் எரிசக்திப் போட்டியில் பின்தங்கி, கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும்,” என அவர் தெரிவித்தார்.
