இந்தியாவின் மிக அரிய பறவை இனமான ‘கானமயில்’ (Great Indian Bustard), சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெற்றிகரமாக குஞ்சு பொரித்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தைக் காக்க, அந்தச் சிறு குஞ்சுக்கு 50 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் பாதுகாப்புக் குழு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் பின்னணியில் ஒரு பெரும் போராட்டம் ஒளிந்துள்ளது. கட்ச் பகுதியில் எஞ்சியிருந்த மூன்று கானமயில்களும் பெண் பறவைகள் என்பதால், அங்கு இயற்கையான இனப்பெருக்கம் சாத்தியமில்லாமல் இருந்தது. இதையடுத்து, வேறொரு பகுதியில் உள்ள இனப்பெருக்க மையத்திலிருந்து கருவுற்ற முட்டை ஒன்று, கையில் ஏந்தக்கூடிய இன்குபேட்டர் (Incubator) மூலம் சுமார் 800 கிலோமீட்டர் சாலை வழியாகக் கொண்டு வரப்பட்டது. 19 மணிநேரப் பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்ட அந்த முட்டை, தற்போது குஞ்சு பொரித்துள்ளது.

இது குறித்து குஜராத் மாநில வனப் பாதுகாப்பு அதிகாரி தீரஜ் மிட்டல் கூறுகையில், “இது வனவிலங்குப் பாதுகாப்பில் ஒரு மைல்கல். ஆனால் உண்மையான சவால் இனிமேல்தான் தொடங்குகிறது. குஞ்சையும் அதன் தாயையும் வேட்டை விலங்குகளிடமிருந்து காக்க 50 பேர் கொண்ட குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றார். அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என உள்ளூர் மக்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியப் பாலைவனங்களில் அதிகம் காணப்பட்ட இந்தக் கானமயில்கள், கடந்த 25 ஆண்டுகளில் மிக வேகமாக அழிந்துவிட்டன. தற்போது உலகம் முழுவதிலும் வெறும் 150 பறவைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. காடுகள் அழிப்பு, தெரு நாய்களின் தாக்குதல் மற்றும் மிக முக்கியமாக உயர் அழுத்த மின் கோபுரங்களில் மோதி உயிரிழப்பது போன்றவை இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டன.

முன்னதாக, இந்தப் பறவைகள் வாழும் பகுதிகளில் மின்சாரக் கம்பிகளை பூமிக்கடியில் புதைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இது நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பாதிக்கும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்த ‘ஜம்ப்ஸ்டார்ட்’ (Jumpstart) முறையிலான இனப்பெருக்க முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். ‘மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினம்’ (Critically Endangered) எனப் பட்டியலிடப்பட்டுள்ள கானமயிலைக் காக்க, இந்தியாவே தற்போது ஒரு சிறு பறவைக் குஞ்சின் பின்னால் திரண்டு நிற்கிறது.