மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் உச்சகட்டமாக மருமகள் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சாகேத் (75) என்பவரது வீட்டில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மருமகள் புஷ்பா சாகேத், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11 மணியளவில், புஷ்பாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது புஷ்பா தனது மாமியாரை வீடியோ எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. வீட்டில் நிலவிய மோதலைத் தடுக்க மாமனார் ஜெகதீஷ் சாகேத் தலையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மருமகள் புஷ்பா, மாமனாரைத் தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கியுள்ளார். தாக்குதலின் போது, புஷ்பா தனது மாமனாரின் மர்ம உறுப்பில் பலமாக உதைத்ததாகத் தெரிகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலால் ஜெகதீஷ் சாகேத் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்திலேயே அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது மூத்த மகன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஜெகதீஷ் சாகேத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற மருமகள் புஷ்பா சாகேத்தை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  குடும்பத் தகராறில் மாமனாரையே மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.