வேலை தேடும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் விசித்திரமான அனுபவம் குறித்த செய்தி ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தான் விண்ணப்பித்த நிறுவனத்தில் இருந்து சுமார் ஒரு ஆண்டுக்குப் பிறகு நிராகரிப்பு மின்னஞ்சல் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு ஒரு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அவர் விண்ணப்பித்திருந்த நிலையில் நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் வராததால் அந்த நிறுவனம் தன்னைத் தவிர்த்துவிட்டதாக அவர் கருதியுள்ளார். இதற்கிடையில் அவர் வேறு ஒரு நகருக்குச் சென்று புதிய பணியில் சேர்ந்து சுமார் 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்பொழுது அந்தப் பழைய நிறுவனத்திடம் இருந்து உங்கள் அனுபவம் எங்களுக்குப் பொருந்தவில்லை என்று பதில் வந்துள்ளது.

Got a rejection email today for a job I applied to in May 2024
byu/C0smicFable inrecruitinghell

இந்த வினோதச் சம்பவம் குறித்து அந்த இளைஞர் இணையத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து பலரும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற கசப்பான மற்றும் வேடிக்கையான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். பல நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு நடைமுறைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு நிறுவனத்தில் இருந்து விண்ணப்பித்த ஆறு ஆண்டுகள் கழித்து வேலைக்கு விருப்பமா என்று தமக்கு மின்னஞ்சல் வந்ததாக மற்றொருவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

விண்ணப்பதாரர்களின் விவரங்களை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைப்பதாகக் கூறும் நிறுவனங்கள் தற்பொழுது அந்த இளைஞருக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒரு நகைச்சுவை நாடகம் போல அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.