இந்தியத் தேர்தல் களம் என்றாலே கோடிக்கணக்கான ரூபாய் செலவு, பிரம்மாண்டமான பிரச்சாரங்கள் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், கேரளாவின் எட்டுமானூர் தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா – SUCI) கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆஷ்னா தம்பி (26) என்ற இளம்பெண், தனது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு வெறும் 84 ரூபாய் மட்டுமே.
அவரது கையில் உள்ள ரொக்கம்: ரூ. 40 வங்கி கணக்கில் உள்ள இருப்பு: ரூ. 44 இதைத் தவிர அவருக்குச் சொந்தமாக வீடோ, நிலமோ, நகைகளோ அல்லது வாகனங்களோ எதுவுமே இல்லை எனத் தெரிவித்துள்ளார். 2026 கேரள சட்டமன்றத் தேர்தலிலேயே மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக இவர் உருவெடுத்துள்ளார்.
பணபலம் இல்லாவிட்டாலும், ஆஷ்னா தம்பி ஒரு வலுவான கல்வி மற்றும் போராட்டப் பின்னணியைக் கொண்டவர். இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர், இதழியலில் (Journalism) முதுகலை டிப்ளமோ முடித்தவர். அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் (AIDSO) தீவிர உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். ஆஷா பணியாளர்களின் உரிமைக்காகப் போராடி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டது முதல், கே-ரயில் (K-Rail) திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வரை அடிமட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.
முன்னணி கட்சிகள் லட்சக்கணக்கில் செலவழிக்கும் நிலையில், ஆஷ்னாவின் பிரச்சாரம் முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பால் நடைபெறுகிறது. ஆதரவாளர்களும் உள்ளூர் மக்களும் ரூ. 10 முதல் ரூ. 50 வரை வழங்கும் நிதியைக் கொண்டு போஸ்டர்களும் துண்டுப் பிரசுரங்களும் அச்சடிக்கப்படுகின்றன. அவரே நேரடியாக வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்து வருகிறார். பணத்தை விட மக்கள் பிரச்சனைகளே முக்கியம் என முழங்கும் ஆஷ்னா தம்பி, தனது தொகுதியில் பின்வரும் முக்கிய அம்சங்களை முன்வைக்கிறார்:
கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை. நெல் விவசாயிகளின் தீர்க்கப்படாத சிக்கல்கள். குடிநீர் தட்டுப்பாடு போன்றவைகளாகும். தினக்கூலித் தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்துள்ள இவரது நேர்மை மற்றும் எளிமை, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், பணபலம் மிக்க வேட்பாளர்களுக்கு மத்தியில் இந்த ‘ரூபாய் 84’ வேட்பாளர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை அரசியல் விமர்சகர்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.
