ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள ஈரானியக் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் ஒன்று சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தடைய உள்ளது.

கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற அஃப்ராமக்ஸ் (Aframax) ரகக் கப்பல் இந்த வார இறுதியில் குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2002-இல் கட்டப்பட்ட இந்தக் கப்பல் மீது 2025-இல் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. இதில் சுமார் 5 லட்சம் பேரல் (ஏறத்தாழ 9.5 லட்சம் டன்) கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் ஈரானின் கார்க் தீவிலிருந்து எண்ணெயை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இந்தியக் கடற்கரையை நோக்கிச் சமிக்ஞைகளை வழங்கி வருகிறது.

கடந்த 2019 மே மாதம், ஈரானிய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா முழுமையாகத் தடை விதித்த பிறகு, இந்தியா அங்கிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்தது. தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த இறக்குமதி இந்தியாவின் எரிசக்தித் தேவையில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. கடந்த மாதம், ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய எண்ணெய்க்கு அமெரிக்கா தற்காலிகமாக வழங்கிய சலுகையை இந்தியா பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் தற்காலிக விலக்கு ஒருபுறம் இருந்தாலும், இதற்கான பணப் பரிமாற்றம்  மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இன்னும் சிக்கல்கள் நீடிக்கின்றன. டாலர் பரிமாற்றத்தில் ஈடுபடும் சில ஆசிய வங்கிகள், தடையில் உள்ள ஈரானிய நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் என்பதால் இப்போதைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றன. ஏற்கனவே மார்ச் 30-இல் மங்களூரு வந்த ‘சீ பேர்ட்’ (Sea Bird) என்ற ஈரானிய எரிவாயு கப்பல், பணப் பரிமாற்றச் சிக்கலால் இன்னும் சரக்குகளை இறக்க முடியாமல் காத்திருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னதாக இக்கப்பல் சீனா செல்வதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதன்முறையாக இந்தியா நோக்கித் திரும்புவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சர்வதேசச் சூழலுக்கு ஏற்ப கப்பலின் இலக்கு கடைசி நேரத்தில் மாறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வாடினார் துறைமுகத்தில் இக்கப்பல் வெற்றிகரமாகச் சரக்குகளை இறக்கினால், அது இந்திய – ஈரானிய வர்த்தக உறவில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.