வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கிலிருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியைப் போலவே, வங்கித் துறையிலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஒருவர் தனது பழைய வங்கி கணக்கு எண்ணை மாற்றாமலேயே, ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு தனது கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘2028-ம் ஆண்டுக்கான பேமெண்ட் தொலைநோக்கு ஆவணத்தில்’ இது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, சம்பளம், கடன் தவணைகள், காப்பீட்டு பிரீமியம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் போன்ற அனைத்து பணப்பரிவர்த்தனை விவரங்களையும் ஒவ்வொன்றாக புதிய வங்கியில் பதிவு செய்ய வேண்டிய பெரும் சிரமம் உள்ளது.

இத்திட்டம் அமலுக்கு வரும்போது, ‘பேமெண்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ்’ என்ற புதிய கட்டமைப்பின் மூலம் இந்த சிக்கல்கள் களையப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதம் அல்லது சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்கும் வங்கிகளுக்குத் தடையின்றி மாற முடியும் என்பதால், வங்கிகளுக்கிடையே தரமான சேவையை வழங்க ஆரோக்கியமான போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.